ஒரு வருடத்தில் 4,400 முறை நிலவை வலம் வந்த ‘சந்திரயான்- 2’

ஒரு வருடத்தில் 4,400 முறை நிலவை வலம் வந்த ‘சந்திரயான்- 2’ – Dinamalar | DailyHunt கடந்தாண்டு ஏவப்பட்ட ‘சந்திரயான்-2’ விண்கலம், ஒரு வருடத்தில் 4,400 முறை நிலவை வலம் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலவை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’, கடந்தாண்டு ஜூலை., 22ல், சந்திரயான்-2 என்ற விண்கலத்தினை, ஜி.எஸ்.எல்.வி., 3 ராக்கெட் வாயிலாக ஏவியது. சந்திரயான்- 2 வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு, ஒரு வருடம் ஆகும் நிலையில், இதுவரை மொத்தம், 4,400 முறை நிலவை வெற்றிகரமாக சுற்றி வந்துள்ளது. ஆனால், நிலவில் தரையிறங்கும் முயற்சியில் விக்ரம் லேண்டர் தரையில் மோதி சேதம் அடைந்தது. இருப்பினும், விண்கலத்தின் ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவின் சுற்று வட்டப்பாதையில் நிலவிலிருந்து 100 அல்லது 125 கி.மீ., தொலைவில் சுற்றி வருகிறது. மேலும், 7 வருடங்கள் நிலவைச் சுற்றி வருவதற்கு தேவையான எரிபொருள் அதில் இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.விண்கலத்தில் உள்ள எட்டுக்கும் அதிகமான உபகரணங்கள், இன்று வரை நன்கு செயல்பட்டு வருகின்றன. அதில் உள்ள சக்தி வாய்ந்த கேமரா வாயிலாக, இதுவரை, 22 படங்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. இந்தப் படங்கள் நிலவின் 1,056 சதுர கி.மீ., பரப்பை தெளிவாக காண்பிக்கக் கூடியவை. மற்றொரு கேமிரா, நிலவில் 40 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவை படம் எடுத்துள்ளது. இப்படங்கள் மூலம் நிலவின் மேற்பரப்பு மற்றும் பள்ளங்கள் தெளிவாக ஆய்வு செய்யப்படும். இப்படங்கள் வாயிலாக, அடுத்த முறை விண்கலம் ஏவப்படும் போது, லேண்டர் பாதுகாப்பாக இறங்க ஏதுவான இடங்கள் கண்டறிய உதவும் என, இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Close Bitnami banner
Bitnami